புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக் கூடாது ஏன்?

by Lifestyle Editor
0 comment

தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்று புரட்டாசி. ஆங்கில மாதங்களில் செப்டம்பர் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தியில் வரை இந்த மாதம் நீடிக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாத சனிக் கிழமைகளில் இந்துக்கள் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப் பழக்கத்தை நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணிக்கிறது. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் என்பது மகாவிஷ்ணுவின் சொரூபம் ஆகும். அதனால் புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாக பார்க்கப்படுகிறது. புதன் சைவத்திற்கு உரிய கிரகம் ஆகும். எனவே, இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும் என்று பாரம்பரியம் கூறுகிறது. மேலும் இந்த மாதத்தில் சனி தன்னுடைய வலிமையை இழக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது சனீஸ்வரனின் கெட்ட பலன்களைத் தடுத்து நன்மையைத் தரும் என்று கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் சூரியக் கதிர்வீச்சின் ஆற்றல் குறைந்து காணப்படும். மழை தொடங்கும். முந்தைய மாதங்களில் பூமியின் வெப்பம் அதிகரித்திருக்கும். வெப்பமான பூமியின் மீது மழைப் பொழிவு நிகழும் போது அதீத வெப்பம் வெளிப்படும். இதன் காரணமாக உடலின் செரிமானத் திறன் உள்ளிட்டவை பாதிப்பை சந்திக்கும். இந்த காலத்தில் புது புது கிருமிகள், பூச்சிகள் தோன்றும். இவை எல்லாம் அசைவம் சாப்பிடும் போது நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடலாம்.

அசைவ உணவுகள் உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியவை. பருவநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சூழலும் வெப்பமாக இருக்கும். இது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்து உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்திவிடலாம். எனவேதான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவைத் தவிர்த்து, துளசி தீர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலிகை ஆகும். பூச்சி, நோய்த் தொற்று அதிகரிக்கும் புரட்டாசி மாதத்தில் துளசி தண்ணீர் அருந்துவது நோய்த் தொற்றிலிருந்து உடலைக் காக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

புது மழை காரணமாக காலரா, ஹெபடைட்டிஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது இத்தகைய நோய் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கும்.

Related Posts

Leave a Comment