இலக்கையும் தாண்டி கொரோனா தடுப்பூசி போட்டு விருதுநகர் மாவட்டம் சாதனை!

by News Editor
0 comment

தமிழகத்தில் இலக்கையும் மிஞ்சி தடுப்பூசி போடப்பட்ட மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா என்ற நிலையில் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 40,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இலக்கையும் மிஞ்சி போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடந்த முன்னணி மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் 1070 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட முகாம்கள் விருதுநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1070 முகாம்கள் மூலம் 55,000 தடுப்பூசிகள் போடப்படவேண்டும். ஆனால் இலக்கையும் தாண்டி விருதுநகர் மாவட்டத்தில் 63,456 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இலக்கையும் தாண்டி 8000 மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி திட்டம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பது தமிழகத்தின் கொள்கை. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என கூறியிருந்தோம். அதன்படி முதல் சட்டமன்ற தொடர் நிறைவு நாளிலேயே இந்த நீட் தேர்வு குறித்து தீர்மானம் கொண்டு வர உள்ளோம். இனி தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு என்ற இல்லாத நிலையை உருவாக்குவோம்” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment