விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தயாராவது எப்படி?

by News Editor
0 comment

விக்கினங்களை நீக்கும் விக்னேஷ்வரன் விநாயகரின் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக விநாயகர் விளங்குகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வணங்குவது மகிழ்ச்சியைத் தருவதுடன், வினைகள் தீரும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை (ஆவணி 25) கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் மண் விநாயகர் சிலையை வாங்கி அலங்கரித்து, வழிபட்டு அதை அன்று மாலை அல்லது மூன்று நாட்கள் கழித்து அல்லது ஆறு நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான் நினைவுக்கு வரும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட இது மட்டும் போதாது. என்ன என்ன எல்லாம் தேவை என்பதைப் பார்ப்போம்.

திருவிளக்கு, எண்ணெய் அல்லது நெய், மலர் மாலை, உதிரி பூக்கள், பூஜை பொருட்கள் வைக்க தட்டுகள், சந்தனம், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, அருகம்புல், எருக்கம்பூ மாலை, நைவேத்தியத்துக்குச் சாதம், அப்பம், உளுந்த வடை, கொழுக்கட்டை, வெல்ல பாயசம், வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களையும் வாங்கிக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை சுத்தம் செய்யலாம் என்று இருந்துவிட வேண்டாம். வியாழக் கிழமையையே வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை காலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர், குடை, தோரணம், அருகம்புல், எருக்கம் மாலை போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, குளித்து தயாராக வேண்டும். பூஜை அறையில் மணைப் பலகை வைத்து அதன் மீது தலைவாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். வாழையிலையின் நுனி வடக்கு பக்கத்தை நோக்கி இருக்க வேண்டும். அரிசியின் மேல் பிள்ளையார் சுழி வரைய வேண்டும்.

பிள்ளையாரை வாங்கி வந்து மணை மீது வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். தொப்பையில் நாணயம் வைக்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், இனிப்புகள், பழங்கள் என எல்லாம் சேர்த்து 21 என்ற எண்ணிக்கையில் வரும் வகையில் பூஜைக்குத் தயார் செய்வது நல்லது. குடை, மாலை என அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தீப, தூப ஆராதனை செய்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

விநாயகருக்கு உரிய மந்திரங்கள், சொல்லி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். கடைசியில் ‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரம் சொல்லி முடிக்கலாம்.

பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 4.30 முதல் 5.30 வரை.

பூஜை முடித்து இன்றோ அல்லது மூன்று, ஐந்து, ஏழாவது நாளிலோ விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் வரை அவருக்கு இரு வேளையும் பூஜை மற்றும் நைவேத்தியம் செய்ய வேண்டும். தொப்பையில் வைத்த காசை எடுத்து, பூஜை அறையில் வைத்தால் செல்வம் பெருகும்!

Related Posts

Leave a Comment