விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஸ்ய தகவல்!

by News Editor
0 comment

விநாயகரின் பிறந்த நாளை உலகம் முழுக்க வாழும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றனர். ஞானத்தின் அடையாளமாகவும் மகிழ்ச்சி, செல்வச் செழிப்பை அருள்பவராகவும் விநாயகர் பார்க்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி என்பது பெரும்பாலான வட மாநிலங்களில் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்று தொடங்கும் விழா 10 நாட்கள் வரை நடைபெறும். அதாவது செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 21ம் தேதி வரை கொண்டாட்டம் நிலவும். இந்த நாட்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

தமிழ்நாட்டில் இல்லங்கள் தோறும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். பொது இடங்களில் மிக பிரம்மாண்ட சிலைகள் நிறுவிக் கொண்டாடுவது சமீப காலமாக வழக்கமாகி வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும்.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். கிரகோரியன் ஆங்கில நாட்காட்டியில் இது ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில் வரும். இந்து மத நம்பிக்கை படி முழு முதற் கடவுளாக விநாயகர் விளங்குகிறார். எனவே, அவருக்கு முதல் பூஜை. தடைகளை நீக்கக் கூடியவர் என்பதால் விக்னேஷ்வரா என்று விநாயகர் அழைக்கப்படுகிறார்.

1893ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக பால கங்காதர திலகர் தொடங்கினார். விநாயகரை இந்தியா, நேபாளம் மட்டுமின்றி இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, சீனா, ஜப்பானிலும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்து மத புராணங்கள் படி, பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது நந்தி தேவரைக் காவலுக்கு வைத்துவிட்டு சென்றார். சிவன் வந்ததால் அவரை நந்தி தேவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், அடுத்த முறை நந்தி தேவரைக் காவலுக்கு வைக்காமல் தன் உடலிலிருந்த சந்தனத்தை (சிலர் மஞ்சள் என்றும் கூறுவர்) உருட்டி குழந்தையை உருவாக்கி, காவல் காக்கும்படி கூறி சென்றார்.

அப்போது சிவன் வரவே அவரை யார் என்று தெரியாத விநாயகர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அந்த குழந்தையின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டார். இதற்குள் குளித்து முடித்து வந்த பார்வதி தேவி, தன் மகனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு கோபம் கொண்டார். நடந்ததை அறிந்து வருந்தினார்.

பார்வதி தேவியின் மனம் வருந்துவதை உணர்ந்த சிவபெருமான், தலை வெட்டப்பட்ட குழந்தைக்கு உயிர் கொடுப்பதாகக் கூறினார். வடக்கு புறமாக தன்னுடைய கனங்களை அனுப்பி முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து வரச் செய்தார். அப்படிச் சென்றவர்கள் கொண்டு வந்தது யானையின் தலையைத்தான். அதை வைத்து குழந்தைக்கு உயிர் கொடுத்தார் சிவபெருமான்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.17க்கு தொடங்கி இரவு 10 மணி வரை நீடிக்கிறது. விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யக் காலை 11.03 முதல் பிற்பகல் 1.33 வரை சிறந்த நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில் விநாயகரை வணங்கி நம் இல்லத்தில் உள்ள தடைகளை நீக்கி, அமைதியான வாழ்வைப் பெறுவோம்!

Related Posts

Leave a Comment