இந்த பழக்கம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ மாரடைப்பு சீக்கிரம் வருமாம்

by News Editor
0 comment

சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 40 வயதிலேயே பலர் மாரடைப்பால் இறக்கிறார்கள். சமீபத்தில் கூட பிக் பாஸ் வெற்றியாளரான சித்தார்த் சுக்லா காலையில் திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 40 தான்.

கடந்த சில வருடங்களாக 50 வயதிற்கு உட்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பால் அதிகமாக இறக்கிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் மாரடைப்பால் இதுவரை இறந்துள்ளனர்.

இதயத் தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது மாரடைப்பு நிகழ்கிறது. இப்படி ஏற்படும் போது இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க வேண்டிய சிகிச்சைகளை கொடுக்க தாமதமாகும் போது, இதய தசைகள் அதிக சேதமடைகிறது என்று சிடிசி கூறுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு பல ஆபத்து காரணிகள் உள்ளன. அவற்றில் குடும்ப வரலாறு, வயது போன்றவற்றால் வருவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

இருப்பினும், பல தினசரி பழக்கங்கள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றன. அந்த பழக்கங்கள் என்னவென்பதை தெரிந்து, அப்பழக்கங்களை கைவிட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது அப்பழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

தினமும் வெளியே சாப்பிடுவது
நீங்கள் தினமும் ஹோட்டலில் சாப்பிடுகிறீர்களா? ஹோட்டல் உணவுகளை தினமும் சாப்பிட்டால், அது இதய ஆரோக்கியத்தை படுமோசமாக பாதிக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் உடலில் தேங்கி, இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே முடிந்த வரை ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.

கலோரி அதிகம் நிறைந்த ‘இந்த’ உணவுகள் உங்களுக்கு என்ன ஆரோக்கிய நன்மைகளை தருகிறது தெரியுமா? கலோரி அதிகம் நிறைந்த ‘இந்த’ உணவுகள் உங்களுக்கு என்ன ஆரோக்கிய நன்மைகளை தருகிறது தெரியுமா?

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பித்ததால், பலரும் தங்கள் வீடுகளிலேயே இருந்து வேலையை செய்து வருகிறோம். இதனால் பலரது வாழ்க்கை முறை மாறிவிட்டது. குறிப்பாக பலரும் சோம்பேறியாகிவிட்டோம் என்று தான் கூற வேண்டும். சோம்பேறித்தனத்தால் உடலுக்கு சிறு வேலையும் கொடுக்காமல் இருக்கிறோம். உடல், குறிப்பாக இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன. இதனால் உடலில் இருக்கும் கொழுப்புக்களின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. ஒருவரது கொழுப்புக்கள் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு ஆரோக்கியமான அளவில் இருக்க, தினமும் குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் இதயம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மதுப்பழக்கம்
எப்போதாவது ஒரு டம்ளர் ஒயின் அல்லது பீர் குடித்தால் மாரடைப்பு வராது. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறாரோ, அப்போது இதய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. மது அருந்தும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் இது உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆல்கஹாலில் கலோரிகள் அதிகம் உள்ளன. உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்கும் போது, அது ட்ரைகிளிசரைடுகளாக மாற்றப்பட்டு, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே இப்பழக்கம் இருப்பின் உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

அதிகமான மன அழுத்தம்
நாம் அனைவருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாவோம். மன அழுத்தம் இதய ஆரோக்கியத்தை படுமோசமாக பாதிக்கும். சொல்லப்போனால் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படுவதற்கு மன அழுத்தமும் ஓர் முதன்மையான காரணமாக இருக்கலாம். ஏனெனில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பிற்கான ஒரு முக்கிய காரணி. எனவே மன அழுத்தத்தில் நீங்கள் இருப்பது போல் இருந்தால், உடனே அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். யோகா, தியானம், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பான வழிகள் ஆகும்.

புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பது இதய நோய்க்கான மிகப்பெரிய ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகும். இது இதயநோய் தொடர்பான மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்பாகும். ஒவ்வொரு முறை ஒரு சிகரெட்டை உள்ளிழுக்கும் போதும், உடலில் 5,000-க்கும் அதிகமான ரசாயனங்கள் உடலினுள் செல்கின்றன. அவற்றில் பல உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை. இந்த ரசாயனங்களில் ஒன்று கார்பன் மோனாக்சைடு. இது இரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, இதயத்தை சேதப்படுத்துகிறது. அதோடு இது தமனிகளில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. எனவே புகைப்பழக்கம் இருப்பின், முடிந்தவரை அவற்றைக் கைவிட முயற்சி செய்யுங்கள்.

போதைப்பழக்கம்
சில மாரடைப்புகள் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டால் தூண்டப்படுகின்றன. கொக்கைன் அல்லது ஆம்பெடமைன்கள் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது கரோனரி தமனிகளில் இறுக்கத்தைத் தூண்டி மாரடைப்பை ஏற்படுத்தும்.

மாரடைப்பின் அறிகுறிகள்
மாரடைப்பிற்கான அறிகுறிகளை ஒருவர் அறிந்து வைத்திருப்பது, உயிரைக் காப்பாற்ற பெரிதும் உதவியாக இருக்கும். எப்படியெனில் மாரடைப்பு வந்த உடனேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம். சிடிசி-யைப் பொறுத்தவரை, மார்பு வலி, அல்லது அசௌகரியம், மார்பின் இடது பக்கம் அல்லது மையப் பகுதியில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக நீடித்திருக்கும், பலவீனம், லேசான தலைவலி அல்லது மயக்கம், தாடை, கழுத்து அல்லது முதுகு பகுதியில் வலி அல்லது அசௌகரியம், இரண்டு கைகள் அல்லது தோள்பட்டைகளில் வலி அல்லது அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளாகும்.

Related Posts

Leave a Comment