கையளவு வால்நட் இதய நோய் வாய்ப்பைக் குறைக்குமாம்!

by News Editor
0 comment

தினமும் கையளவு வால்நட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைவதுடன், இதய ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ஏற்படும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவில் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழுப்பில் எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு, எல்.டி.எல் மற்றும் டிரைகிளசரைட் என்ற கெட்ட கொழுப்புகள் உள்ளன. மீன், வால்நட், பாதாம் போன்றவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்வதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சர்குலேஷன் என்ற பிரபல மருத்துவ இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வால்நட்டில் மிக அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதய ரத்த நாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அது மட்டுமின்றி பக்கவாதத்துக்கான வாய்ப்பும் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் வால்நட் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது. மேலும் எல்.டி.எல் துகள்களின் தரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எல்.டி.எல் துகள்கள் பல்வேறு அளவுகளில் வரும். மிகப் பெரியதைக் காட்டிலும் மிகச் சிறிய அளவில் வரும் துகள்கள் ரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. வால்நட் சாப்பிடுபவர்களின் ரத்தத்தை பரிசோதித்த போது எல்.டி.எல் கொழுப்பு துகள்களின் அளவில் பெரிதாக இருப்பது தெரியவந்தது என்று ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு பற்றியும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை எப்படிக் குறைக்கலாம் என்பது பற்றியும் புரிதல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் இதய நோய்க்கான வாய்ப்பை குறைக்க முடியும். ஆரோக்கியமான முறையில் வயோதிகத்தை எதிர்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு 2012 முதல் 16ம் ஆண்டு வரை ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. 63 முதல் 79 வயதுக்கு உட்பட்ட 708 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment