வீட்டில் லட்சுமி, விநாயகர் படம் எங்கு வைத்து வழிபடலாம்?

by News Editor
0 comment

நாயகர் மற்றும் லட்சுமி படங்கள் அல்லது சிலைகளை வைத்து வழிபடாத இந்துக்களே இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஒவ்வொரு இந்து வீட்டிலும் நிச்சயம் விநாயகர், லட்சுமியின் படங்கள் இருக்கும். இவர்களை வழிபடுவது வீட்டுக்கு நன்மையையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையாக உள்ளது. விநாயகருடன் லட்சுமி தேவி இருக்கும் புகைப்படங்கள் ஞானத்தையும் வளத்தையும் செல்வத்தையும் அளிக்கும். ஞானம் இல்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. எனவே ஞானம் நமக்கு வேண்டும் என்றால் சரியான முறையில் வழிபாடு நடத்துவது எப்படி என்ற புரிதல் நமக்கு வேண்டும்.

ஒருவர் ஞானமின்றி இருந்தால் தன்னுடைய நிலையை உணர மாட்டார். செல்வம் பற்றிய அறிவு அவருக்கு இருக்காது. தவறான செயல்கள், தவறான பழக்கவழக்கங்கள் காரணமாக செல்வம் அவரிடமிருந்து வெளியேறிவிடும். செல்வம் நம் வீட்டில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் அதை தக்க வைக்கும் ஞானம் நமக்கு வேண்டும். எனவே தான் விநாயகருடன் இருக்கும் லட்சுமி படத்தை வைத்து வழிபடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

யார் முதலில் உலகை சுற்றி வருவது என்ற போட்டியில் முருகனை தோற்கடித்து விநாயகர் வெற்றிபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. அன்னை தந்தைதான் உலகம் என்ற ஞானமே விநாயகர் வெற்றி பெற காரணம். வீட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள், விக்ரகங்களை எங்கு வைத்து வழிபடலாம் என்பதற்கு சில முன் உதாரணங்கள் உள்ளன.

விநாயகருக்கும் வடக்கு திசைக்கும் தொடர்பு உண்டு. விநாயகரின் மனித தலை வெட்டப்பட்ட பிறகு, தாய் பார்வதி எனக்கு இப்போதே என்னுடைய குழந்தை வேண்டும் என்று சிவனிடம் கேட்கிறார். அப்போது வடக்குப் பகுதிக்கு சென்று முதலில் கண்ணில் படும் விலங்கின் தலையைக் கொண்டு வரும்படி சிவன் உத்தரவிடுவார். எனவே, விநாயகர், லட்சுமி படங்களை வீட்டில் வைத்து வழிபட சிறந்த இடம் வட கிழக்கு மூளையாகும். அதே போல் லட்சுமி நின்று கொண்டிருக்கும் படம் நல்லதா அமர்ந்திருக்கும் படம் நல்லதா என்ற கேள்வியும் பலருக்கும் உண்டு. அமர்ந்து கொண்டு அருள்பாலிக்கும் படத்தை வைப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

தாமரையில் அமர்ந்து லட்சுமி அருள் பாலிப்பது நல்லது. நின்ற நிலையில் இருப்பது செல்வம் மிக வேகமாக நம்மைவிட்டுப் போய்விடும் என்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. அதே போல் விநாயகரின் வலது புறத்தில் தான் லட்சுமி இருக்க வேண்டும். இடது புறம் என்பது பெரும்பாலும் மனைவிகள் நிற்கும் இடமாக கருதப்படுவதால் அங்கு லட்சுமி அமர்ந்திருப்பது போன்று அமைக்கக் கூடாது.

Related Posts

Leave a Comment