வலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா?தரவுகளை தரமறுக்கும் சீனா.. WHOஎடுத்த அதிரடி முடிவு

by Lifestyle Editor
0 comment

வலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா?தரவுகளை தரமறுக்கும் சீனா.. WHOஎடுத்த அதிரடி முடிவு

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலேயே அனைத்து நாடுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும்கூட எந்தவொரு நாட்டினாலும் கொரோனா பாதிப்பு முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. பிரிட்டன் போன்ற வெகு சில நாடுகள் மட்டும் தீவிர கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தியுள்ளது.

கொரோனா தோற்றம்

கொரோனா மக்களிடையே பரவ தொடங்கி 1.6 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த காலத்தில் கொரோனாவுக்கு எதிரான வேக்சினும் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும்கூட கொரோனாவின் தோற்றம் இன்னும்கூட மர்மமாகவே உள்ளது. கொரோனா விலங்கில் இருந்து தோன்றியதா அல்லது ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறியதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

ஆய்வு மையம்

கொரோனா வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தோன்றியதாக வெளியான தகவலை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்யச் சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களும்கூட அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே குறிப்பிட்டனர். இருப்பினும், வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா பரவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச ஆய்வாளர்கள்

இந்நிலையில், கொரோனா தோற்றம் குறித்து சீனாவில் இரண்டாம்கட்ட ஆய்வுகளைச் செய்ய புதிய ஆராய்ச்சியாளர்களை அனுப்ப உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. புதிய ஆராய்ச்சி திட்டம் குறித்து விளக்கிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவ தொடங்கிய காலத்தின் மூல தரவுகள் எதுவும் முறையாக இல்லாததால் விசாரணைகள் தடைப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

எங்கு ஆய்வு

இந்த இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளில் வூஹான் விலங்கு சந்தையில் இருந்த விலங்குகள், அங்கு பணிபுரிந்த மனிதர்கள் ஆகியோரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எங்குப் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அந்த ஆய்வகங்களிலும் ஆராய்ச்சி நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

சீனா விரும்பவில்லை

இருப்பினும், சர்வதேச ஆய்வாளர்கள் மீண்டும் சீனாவில் ஆராய்ச்சி செய்வதை அந்நாடு விரும்பவில்லை என்றும் இதனால் உலக சுகாதார அமைப்பு அனுப்பும் ஆய்வாளர்களைச் சீன அரசு மீண்டும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பது கடினம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் சீனா வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

தர முடியாது

கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கிய போது சேகரிக்கப்பட்ட தரவுகளை உலக சுகாதார அமைப்பு கோரியிருந்தது. இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளதால் சில தரவுகளை உலக நாடுகளுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார். சீனாவின் இந்தக் கருத்து சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்க புலனாய்வுத் துறை கொரோனா தோற்றம் குறித்து புதிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில் கொரோனா பாதிப்பு சீனா அறிவிப்பதற்கு சில மாதங்கள் முன்னரே, வூஹான் ஆய்வு மையத்தில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா ஒத்த அறிகுறிகள் இருந்ததாகவும் அவர்களுக்கு கொரோனாவுக்கு அளிக்கப்படுவது போன்ற அதே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா போன்ற பல உலக நாடுகளும் கொரோனா தோற்றம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment