அருளை அள்ளி தரும் ஆடி … இம்மாதத்தின் முக்கிய நாட்கள் இதோ!

by Lifestyle Editor
0 comment

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களும் விசேஷமான ஒன்றாக காட்சியளிக்கும். அதேபோல் ஆடி மாதத்தில்தான் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதத்தில் விசேஷமான நாட்கள் என்ன ? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து இந்தச் செய்தியில் காணலாம்.

ஆடித்தபசு – ஆடி பௌர்ணமி – 23.07.2021

சங்கரன்கோவில் கோமதி அம்மன் புன்னைவன காட்டில் தவம் இருந்தார். இறைவன் ஒருவனே என்பதை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் அவர் மேற்கொண்ட தவத்தின் பயனாக சங்கரநாராயண இறைவன் அவர்முன் காட்சியளித்தார். இந்த நாளே ஆடி தபசு என்று கொண்டாடப்படுகிறது. ஆடி பவுர்ணமி அன்று அம்பிகை வழிபாடு செய்தால் அற்புதமான பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஆடிப்பெருக்கு – 03.08.2021

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்; பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளின் புதுமண தம்பதியர் தங்கள் வாழ்வு சுகமாக அமைய வேண்டும் என்பதற்காக வெற்றிலை, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலி பெண்களுக்கு அளிப்பர். அத்துடன் நீர்நிலைகளில் பூஜை செய்து சுமங்கலியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வர்.

ஆடி அமாவாசை – 08.08.2021

அமாவாசை என்பது முன்னோர்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை என்பது அமாவாசை தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த நாளில் மறைந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்து அவர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் போது அவர்களின் உள்ளம் குளிர்ந்து குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் பல அமாவாசைகளில் முன்னோர் வழிபாட்டை செய்ய முடியாமல் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை அன்று தர்பணம் கொடுத்து முன்னோரை வழிபட்டால் அந்த குறைகள் அனைத்தும் நீங்கிவிடும் .

ஆடிப்பூரம் – 11.08.2021

ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் தான் ஆண்டாள் அவதரித்தார். இந்த நாள் திருவாடிப்பூரம் என்று சொல்லப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு போன்ற விழா நடத்தி அதை திருமணமான பெண்களுக்கு அளிக்கும்போது குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Related Posts

Leave a Comment