எங்கும் கொரோனா நோயாளிகள், உயிரிழப்புகள்.. திணறும் இந்தோனேசியா..அடுத்த இந்தியாவாக மாறலாம் என வார்னிங்

by Lifestyle Editor
0 comment

ஜகார்த்தா: டெல்டா கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் அடுத்த இந்தியாவாக இந்தோனேசியா மாறலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை இதுவரை எந்தவொரு நாடும் முழுவதுமாக கட்டுப்படுத்தவில்லை. சில நாடுகள் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன என்றாலும் எந்த நாடும் முழுவதுமாக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் அது அலை அலையாக ஒவ்வொரு நாட்டையும் தாக்குவதால் மோசமான பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் 2ஆம் அலை

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை ஏற்படத் தொடங்கியது. மே முதல் வாரம் உச்சத்தை அடைந்த 2ஆம் அலை சமயத்தில் தினசரி பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அந்தச் சமயத்தில் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. ஒருபுறம் கொரோனாவாலும் மறுபுறம் சரியான நேரத்தில் ஆக்சிஜன், படுக்கை கிடைக்காததாலும் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கின.

டெல்டா கொரோனா

இந்தியாவில் 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்த டெல்டா கொரோனாவே முக்கிய காரணம். இப்போது இந்த டெல்டா கொரோனா மற்ற நாடுகளிலும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவில் டெல்டா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஏற்பட்டதைப் போலவே படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வைரஸ் பாதிப்பு

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மக்கள்தொகை அதிகமுள்ள முக்கிய தீவுகளில் டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் புடி குணாடி சாதிகின் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் அச்சமூட்டும் வேகத்தில் படுக்கைகள் நிரம்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரட்டிப்பு

அங்குள்ள சில முக்கிய தீவுகளில் வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. நிலைமை இப்படியே சென்றால் படுக்கைகள் இல்லாத நிலை விரைவில் உருவாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியாவுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவை என்றும் அதைவிட வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்றும் அந்நாட்டின் தொற்றுநோய் வல்லுநர் இஸ்மென் முக்தர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை

கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் அங்கு ஒரே மருத்துவமனையில் 11 பேர் அடுத்தடுத்து பலியாகினர். கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவமனைகளில் இடமில்லாததால் தனிமையிலிருந்த 550 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளதாகவும் சில தரவுகள் வெளியாகியுள்ளன. இதனால் நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அடுத்த இந்தியா

அங்கு நிலைமை இப்படித் தொடர்ந்தால், இந்தோனேசியா அடுத்த இந்தியாவாக மாறலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அந்நாட்டிற்கு உதவும் வகையில் சீனா மற்றும் சிங்கப்பூர் 1500 ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை அனுப்புவதாக அறிவித்துள்ளன. மேலும், இந்தாண்டு படிப்பை முடிந்த 2000 புதிய மருத்துவர்கள், 20,000 செவிலியர்களை மருத்துவமனைகளில் பணியமர்த்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment