கொரோனா தனிமையை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகள்

by Lifestyle Editor
0 comment

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், லேசான பாதிப்பை எதிர்கொள்பவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் தனிமை சூழலில் இருக்க வேண்டியது அவசியமானது. கொரோனா பரவலால் வெளிப்புற சூழலும் ஆபத்தானது. அதனால் மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே வழி சமூக ரீதியாக தனிமைப்படுத்திக்கொள்வதுதான்.

குறிப்பாக நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமை உணர்வை அனுபவிக்கிறார்கள். இதனால் கவலை, மனச்சோர்வு, மனநல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையும். இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது.

தகவல் தொடர்பு: கொரோனா வைரஸ் பற்றிய பயம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதுபற்றிய எதிர்மறையான தகவல்களையே கேட்டுக்கொண்டிருப்பார்கள். அது பதற்றத்திற்கு வழிவகுக்கும். நேர்மறையான செய்திகளை கேட்டறிவதுதான் இயல்பு நிலைக்கு திரும்ப வழிகாட்டும். மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தனிமை உணர்வையும் தவிர்க்க உதவும். சுகாதாரம் சார்ந்த தகவல்களை கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவது சிறந்த உளவியல் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.

இணைந்திருங்கள்: இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அன்புக்குரியவர்களுடன் தொழில்நுட்பத்தின் துணையுடன் இணைந்திருப்பது அவசியமானது. வீடியோ அழைப்புகள், மெசேஜ்கள், சாட்டிங், ஆன்லைன் தளங்கள், சமூக ஊடகங்கள் என ஏதாவதொரு வகையில் நண்பர்கள், உறவினர்கள், மனதுக்கு பிடித்தமானவர்களுடன் இணைந்திருங்கள். இதுநாள் வரை பகைமை உணர்வு கொண்டிருந்தவர்களுடன் கூட இணைந்திருக்கலாம். அது வாழ்க்கையின் வேறு சில அம்சங்களை அறிய உதவும். கடிதம் எழுதும் பழக்கம் மறைந்துபோய் விட்டது. அதற்கு புத்துணர்வு ஊட்டலாம். மனதுக்கு பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் கடிதம் எழுதலாம். அது அவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.

சுறுசுறுப்பு: மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியமானது. நாள் முழுவதும் ஒரே அறையில் தனிமையில் உட்கார்ந்திருப்பது கடினமானது. தனிமையை உணரும்போதெல்லாம் மன நலத்தை சமாளிக்க உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி செய்யலாம். யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். மூளைக்கு வேலை கொடுக்கும் விளை யாட்டுகளில் கவனம் செலுத்தலாம். இது மனநிலையை சிறந்த பாதையில் பயணிக்க வைக்க உதவும்.

ஆன்லைன் விளையாட்டுகள்: தனிமையில் அமர்ந்து கொண்டு ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது நல்லதல்ல. ஆனால் தனிமை சூழலில் ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள் விளையாடுவது தவறில்லை. அப்போதும் தனிமையில் விளையாடாமல் ஆன்லைன் வழியாக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். இருவராகவோ, குழுவாகவோ விளையாடி மகிழலாம். இவை சலிப்பு, மன சோர்வில் இருந்து விடுவிக்கும். விளையாட்டு தவிர ஆன்லைன் வழியாக கலந்துரையாடல்களில் ஈடுபடலாம். இணையதளங்களில் வேடிக்கையான வீடியோக்கள், நகைச்சுவை உணர்வை தூண்டும் வீடியோக்கள், மனதை இலகுவாக்கும் வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அவைகளை பார்த்து ரசிக்கலாம்.

முயற்சி: கொரோனா பரவலுக்கு முன்பு பிஸியான கால அட்டவணையில் இயங்கி இருப்பீர்கள். புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்ப்பதற்கு நேரம் கிடைத்திருக்காது. இப்போது கிடைத்திருக்கும் தனிமை சூழலை புதிய முயற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், உங்கள் வாழ்க்கைக்கு அதிக மதிப்பை கொடுக்கக்கூடிய புதிய மற்றும் அர்த்தமுள்ள செயலில் ஈடுபடுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

பொழுதுபோக்கு: விரும்பிய விஷயங்களில் ஈடுபட முடியவில்லை, அதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த தனிமை காலத்தை வரப்பிரசாதமாக்கி கொள்ளலாம். படிப்பது, எழுதுவது, திரைப்படங்களைப் பார்ப்பது, நடனம், பாடுவது, ஓவியம் வரைவது, கைவினை பொருட்களை தயார் செய்வது, இசையை கேட்பது என பிடித்தமான செயல்களில் முழு மனதோடு ஈடுபடலாம். ஏனெனில் பிடித்தமான செயல்களை செய்து மகிழ்ச்சியாக இருக்கும்போது நியூரான்கள் மூளைக்கு நேர்மறையான கருத்துகளை தரும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும், செயல்திறனையும் அதிகரிக்க துணைபுரியும். ஆரோக்கியமான மனதுக்கும், நேர்மறை எண்ணங்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு இருக்கிறது. சமூக தனிமை அன்புக்குரியவர்களுடன் உணர்வு பூர்வமாக இணைவதற்கான வாய்ப்பையும், நேரத்தையும் வழங்கும்.

Related Posts

Leave a Comment