ஜெய்சல்மேர் கோட்டை

by Lifestyle Editor
0 comment

‘ஜெய்சல்மேர் நகரின் மகுடம்’ என்பதாக புகழுடன் அறியப்படும் ஜெய்சல்மேர் கோட்டை நகரின் மத்தியிலேயே அமைந்துள்ளது. மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் பட்டு இக்கோட்டையில் மஞ்சள் பாறைக்கற்களால் ஆன சுவர் தங்க நிறத்தில் ஜொலிப்பதால் இது சோனார் குய்லா அல்லது தங்க கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.இது படி ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்சல் எனும் மன்னரால் திரிகுரா மலையின் உச்சியில் 1156ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தில் பல அழகான கோட்டை மாளிகைகள், கோயில்கள் மற்றும் வீரர்கள், வணிகர்களுக்கான தங்குமிடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கோட்டை 30 அடி உயர சுற்றுச்சுவரால் சூழப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கோட்டையான இது 99 காவல் கோபுரங்களுடன் காணப்படுகிறது.

தற்சமயம் இக்கோட்டை வளாகத்தின் உள்ளேயே இந்நகரத்தின் மக்கள்தொகையில் கால்பகுதி வசித்துவருவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த கோட்டை வளாகத்தினுள் எண்ணற்ற கிணறுகள் குடியிருப்போரின் நீர்த்தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளன. ராஜபுத்திர பாணி மற்றும் முகலாய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களுடன் இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள எல்லா கோட்டைகளையும் போலவே இதிலும் பல கோட்டை வாசல்கள் உள்ளன. அகாய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்பவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் அகாய் போல் அல்லது முதல் கோட்டை வாசல் என்று அழைக்கப்படும் கோட்டை வாயில் அமைப்பு அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சி அளிக்கின்றது.

1156ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை வாயில் அரச குடும்பத்தினருக்கும் முக்கிய விருந்தினர்களுக்குமான பிரத்யேக நுழைவாயிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த கோட்டைக்கு செல்ல ஜெய்சல்மேரிலிருந்து ஆட்டோரிக்ஷா அல்லது ரிக்ஷா போன்றவற்றை பயணிகள் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இந்த கோட்டையை விஜயம் செய்வதற்கான நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும்.

Related Posts

Leave a Comment